முதலிலேயே இணையத்தில் இடம், படம் என்று பார்த்து செல்வதற்கு மிக ஆவலுடன் இருந்ததால் தூரம் ஒருபொருட்டாக தோன்றவில்லை :)
காலை உணவாக ஃப்ரட் ஆம்லெட் என்று நன்றாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
போகும்வழி நெடுஞ்சாலையாக இல்லாமல், வளைந்து நெளிந்து, பல கிராமங்களை கடந்து செல்லக்கூடியதாகவே இருந்ததால் அதிக நேரம் எடுத்தது. ஒருவழியாக வந்துசேர்ந்து காரை பார்க் செய்து டிக்கட் வாங்கி மேப்பிலிருந்த 4மணிநேர நடைப்பயண ரூட்டை எடுக்கலாம் என்று முடிவு செய்து வேகமாக நடக்க ஆரம்பித்தோம் :)
எங்களைப்போலவே எல்லோரும் நினைத்ததால் அங்கேயும் டிரஃபிக் ஜாமாகி எங்கு பார்த்தாலும் திருவிழா போல் ஒரே கூட்டம். இதில் வெயிலின் கொடுமையால் குழந்தைகள் ஆங்காங்கே நின்று தாகத்திற்கு அருவியிலேயே தண்ணீர் பிடித்து குடித்து கொண்டார்கள். தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இருந்தது. கூட்டத்தில் இடித்து பிடித்து ஒரு வழியாக நம் குற்றால ஐந்தருவி போல் விழுந்துகொண்டிருந்த பெரிய அருவியை வந்தடைந்தால், அங்கேயும் கூட்டமாக, குடும்பமாக, நண்பர்களாக என்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்கள் பங்கிற்கும் எடுத்துக்கொண்டோம் :)
அங்கிருந்து மலையின் உச்சி நோக்கிச்சென்ற பாதையில் செல்ல முடிவுசெய்து கிளம்பினோம்.
எல்லோரும் வேகமாக ஏறி உச்சி சென்று எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
மலையின் மேலே சென்றபின் அவ்வளவு நேரம் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி
வந்ததெல்லாம் மறந்துபோகும்படியாக கீழேவிழுந்துகொண்டிருந்த டர்க்கீஸ் நிற
(Turkoise) அருவியும், பச்சைநிற புற்களும், கரும்பச்சை மரங்களும்
கொள்ளையழகுடன் காட்சியளித்தன. எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சளிக்காத கொள்ளையழகு :)
ஒருவழியாக மலையின் மேலே போகும்பாதையிலேயே அரைமணி நேரத்திற்கு மேலே நடந்து ரசித்துவிட்டு, கீழே வந்தோம். திரும்பிய இடமெல்லாம் அருவி, மலை, மரங்கள் என்று இண்டெர்நெட்டில் படித்ததுபோலவே மிக அழகாகயிருந்தது.
அருவிகளையும், அதிலிருந்து வரும் தண்ணீர் பாதைகளையும் கடப்பதற்கென்று ஆங்காங்கே மரத்தினால் பாதை அமைத்திருந்தார்கள்.
நாங்கள் கீழேயிறங்கி வரும்போது கூட்டம் வெகுவாக குறைந்து அமைதியாக இருந்தது.
நடந்து நடந்து அனைவருக்கும் கால்கள் வலிக்க ஆரம்பித்தன. ஆனாலும் மனது இன்னும் கொஞ்ச நேரமிருந்து ரசிக்கலாமே என்று கெஞ்சியதைக்கேட்டு, நாங்களும் அமைதியாக இருந்ததால் சிறிதுநேரம் நின்று ரசித்துவிட்டு, சூரியனும் வழியனுப்பி வைக்க திரும்ப மனமில்லாமல் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
பார்க்கிங் திரும்பும்போது 9மணிக்குமேல் ஆகிவிட்டது. இரவாகிவிட்டதால் வீட்டிற்கு செல்வதற்கு எப்படியும் இரவு 12மணியாகிவிடும் என்பதால் விரைவாக கிளம்பினோம். வழியில் மலைகளின் நடுவே சூரியன் மறைவதைப்பார்ப்பதற்கு கொள்ளை அழகாகயிருந்தாலும் வண்டியை நிறுத்தி போட்டோ எடுப்பதற்கு நேரமில்லை :( நான் புலம்புவதைப்பார்த்து, என் கணவர் "சிலவற்றை கண்ணால் ரசிக்க மட்டும்தான் முடியும் " என்றார். அதனால் காரிலிருந்தபடியே ஒன்றிரண்டு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
பத்து மணிக்குமேல் வயிறு லேசாக தானிருப்பதை நினைபடுத்தியது. வழியில் நிறுத்தி ஃபிசா சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். வயிறும் மனதும் நிறைந்திருந்ததால் கொஞ்சநேரத்திலேயே எனக்கு தூக்கம் வந்துவிட்டது :) விபூவும், சத்யாவும் தான் அப்பாவுக்கு தூக்கம் வராமலிருக்க பேசிக்கொண்டே வந்தார்கள்.
இரவு 12.30மணிக்கு வீட்டிற்குவந்து குளித்துவிட்டு நிம்மதியாக தூங்கினோம்.
ஆனால் நாளைய பயணத்தை நினைத்து என்னால்தான் நிம்மதியாக தூங்கமுடியவில்லை :(
தொடரும்................................ ;)
No comments:
Post a Comment