Saturday, September 29, 2012

கோடைவிடுமுறை நார்வே: Kjerag- 16.08.12

காலை எழுந்து, எல்லோரும் மிக மிக ஆவலாக எதிர்பார்த்துக்காத்திருந்த கியராக் மலை பார்க்க விரைவாக கிளம்ப வேண்டும் என்று ப்ளான், ஆனால் எல்லோரும் குளித்து, மேக்-அப் செய்து, காலை உணவை, வேறு என்ன எப்போதும்போல் ப்ரெட், கார்ன்ப்ளக்ஸ் தான், முடித்து கிளம்பும்முன் எப்போதும் போல் காலை 11:00 மணியாகி விட்டது :)
வீட்டின் வெளியே வந்து பார்த்தால் ஒரு பக்கம் பனிமூட்டமாகவும், மறுபக்கம் வெயிலாகவும் காட்சியளித்தது. ஆகா என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்தோம், இருந்தாலும் கியராக் மலை, நாங்கள் தங்கியிருந்த சிர்டால் ஊரிலிருந்து ஒன்றரைமணி தூரத்தில் இருந்தது. மனதை தேற்றிக்கொண்டு எல்லாம் நாம் அங்கு போய்ச்சேருவதற்குள் வெயில் வந்துவிடும் என்று வண்டியை கிளப்பினோம். போகும் வழியெல்லாம் மிக மிக அற்புதமாக இருந்தது. அப்போது நிற்பதற்கு நேரமில்லை, இண்டெர்நெட்டில் கியராக் மலை ஏறி இறங்குவதற்கு 4 மணிநேரம் போட்டிருந்தது, நமக்கு எப்படியும் குறைந்தது 6  மணிநேரம் ஆகும் என்று வண்டியை நேராக எங்கும் நிற்காமல் கியராக் நோக்கி விட்டோம்.

அதனால் காரில் இருந்தபடியே ரசித்துக்கொண்டு அப்படியே போட்டோ எடுத்துக்கொண்டோம். மதியம் 12:30 மணிக்கு கியாரக் வந்தடைந்தோம். காரை பார்க் செய்துவிட்டு மலை ஏறக்கிளம்பினோம்.


காற்று ஆளையே தூக்கிக்கொண்டு போவதுபோல அடித்தது. பேய்க்காற்று என்று கேள்விதான் பட்டிருக்கிறேன், இன்று தான் நேரில் அனுபவித்தேன். எங்கு நம்மையே தூக்கிக்கொண்டு போய்விடுமோ என்று பயமாக இருந்தது. மலையோ அதற்குமேல் வெறும் மொட்டைமலையாக காட்சி அளித்தது, ஏறுவதற்கு படிகள் இல்லை, பிடிப்பதற்குக்கூட சில இடங்களில் மட்டுமே கம்பியிருந்தது, பல இடங்களில் ஒன்றுமேயில்லை. ம்ம்ம்.... எப்படி ஏறுவது என்று அப்போதே கவலை ஆரம்பித்துவிட்டது. ஓரு வழியாக சுற்றிச்சுற்றி ஏற ஆரம்பித்தோம்.


நாங்கள் மட்டுமில்லை, எங்களைப்போல நிறைய பேர் அங்கு வந்தபின்னும் யோசித்து கொண்டிருந்தார்கள்.
போகுப்போக பாதை மோசமாகிக்கொண்டே போனது.































மேலே ஏற ஏற மேகம் இருட்டிக்கொண்டுவரத்தொடங்கியது,கொஞ்சநேரத்தில்
மழையும் ஆரம்பித்தது. எங்களுடன் வந்தவர்களும் திரும்ப ஆரம்பித்தார்கள். நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கையில் திரும்பிவந்து கொண்டிருந்தவர்களும் இதற்குமேல் போக முடியாது, பனிமூட்டம் மலையை மூடிவிட்டது என்று கூறினார்கள். வேறுவழியில்லாமல் பாதிவழியிலேயே திரும்பினோம். 825 மீட்டர் மலை உயரத்தில் இருந்ததால் மழை சட்டென்று பெரிதாகி நன்கு பெய்யத்தொடங்கியது. செங்குத்தான பாறைகள் எல்லாம் மழையில் நனைந்து, நடக்கவே பயமாக இருந்தது. விபூவையும், சத்யாவையும் இறங்கும்படி சொல்லிவிட்டு, மெதுவாக உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அடிமேல் அடிவைத்து இறங்கினோம்.

மலையில் சொட்டச்சொட்ட நனைந்துகொண்டே இறங்கி ஒருவழியாக காரை அடைந்தோம். கனத்த மனத்துடனும், மிகுந்த சோகத்துடனும் சொட்டச்சொட்ட நனைந்த உடைகளுடன் நடுங்கிக்கொண்டே வீட்டிற்கு காரை கிளப்பினோம் :( மாலை 6 அரைமணிக்கு வீட்டிற்கு வந்துசேர்ந்தோம். அனைவரும் மிகுந்த அசதியில் இருந்ததால் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.

அடுத்தநாள் எழுந்தபோதே நன்றாக வெயில் அடித்தது. அடுத்த ஊரான லிசபோட்டன் (Lyseboten) போவதற்கு தயாரானோம்.
 
                                                                                     பயணம் தொடரும்...................













Thursday, September 27, 2012

கோடைவிடுமுறை நார்வே: Sirdal- 15.08.12


ஓஸ்லோவிலிருந்து காலை 11 மணிக்கு கிளம்பி ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகே நகர வாழ்க்கை முடிந்து, இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் அழகைக்காண முடிந்தது. பாதை வளைந்து, நெளிந்து மலையின் ஏற்றம் துவங்கிவிட்டது. முதல் ஹேர்பின்பெண்டும் ஆரம்பித்துவிட்டது. எனக்கு டென்ஷனும் தான் :( எல்லோரும் "cool, cool mummy" என்று சொன்னாலும், ஒன்றும் நடக்கவில்லை, நல்லபடியாக மலையைக்கடந்து இருட்டுவதற்குள் புக் செய்துள்ள வீட்டை அடையவேண்டும் என்ற கவலைதான்.
ஆனாலும் வெளியே உள்ள அழகைப்பார்த்துவிட்டு நிற்காமல் இருக்கமுடியவில்லை ;) எல்லோரும் அம்மா கையில் கேமராவை எடுத்துக்கொடுங்கள், அப்போதுதான் டென்ஷன் இல்லாமல் வருவாள் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதுபார்த்து கரெக்ட்டாக ஒரு ஹேர்பின்பெண்டில் வளையும்போது நதி, மலை என வியூ சூப்பராக இருந்தது. சட்டென்று அப்படியே அங்கேயே என் கணவர் பிரேக் போட்டார், முன்னாலும் பின்னாலும் தான் காரே கிடையாதே, அங்கு நாங்கள் தான் ராஜா, மந்திரி எல்லாமே :) காரிலிருந்து இறங்கவே பயமாக இருந்தது, அப்படி செங்குத்தாக கார் நின்றது. ஒருவழியாக இறங்கி போட்டோ எடுத்துவிட்டு
பயணத்தைத்தொடர்ந்தோம்.
சின்னப்பிள்ளையில் படித்த மந்திரவாதிக்கதைதான் ஞாபகம் வந்தது, ஏழு மலை, ஏழு கடல் தாண்டி பொக்கிஷத்தை எடுக்கவேண்டும் என்று. அப்படித்தான் நாங்களும் சென்றோம். எப்போதாவது அத்தி பூத்தார்போல் பின்னால் வந்த கார்களையும் அதன்பின் காணவில்லை, போகப்போக மலையும் போய்க்கொண்டிருக்கிறது, ரோடும் மலைகளின் நடுவே வளைந்து, வளைந்து சென்றுகொண்டே...... இருக்கிறது. 

கண்ணுக்கெட்டும் தூரம் வரை, எந்த திசையில் திரும்பினாலும் நம் கண்ணுக்கு தெரிந்தது மலை, மலை.... மலை மட்டும்தான். அப்போது தூரத்தில் ஒரு கார் வருவது தெரிந்தது, அனைவருக்கும் காணாததைக்கண்டதுபோல சந்தோஷம் :)  மலை ஏறி
எவ்வளவு உயரத்தில்

இருக்கிறோம் என்றே தெரியவில்லை. ஆனால் அவ்வளவு  உயரத்திலும் ரோடுகள் சுத்தமாகவும், பராமரிக்கப்பட்டும் இருந்தது. நாங்களும் தோன்றிய இடங்களில் எல்லாம் காரை நிறுத்தி போட்டோ எடுத்துக்கொண்டோம்.  திடீரென்று மணியோசை காதில் கேட்டது!!!


ஆகா என்னடா இந்த ஆள் நடமாட்டமே இல்லாத மலையில் எங்கிருந்து மணியோசை வருகிறது என்று பார்த்தால் நன்கு கொழுத்த செம்மரி ஆடுகள் புல்மேய்ந்து கொண்டிருந்தன, ஓகே அதையும் விடுவானேன் என்று போட்டோ எடுக்க பக்கத்தில் செல்ல, அதுவரை அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த ஆடு மே, மே என கத்தி பக்கத்திலிருந்த அதன் ஃப்ரண்ட்ஸ்-ஐம் கூட்டிக்கொண்டு என்னை நோக்கி "விடாதே பிடி" என திருடனை பிடிக்க வருவது போல் தன் கொழுத்த புசு புசு உடம்பை தூக்கிக்கொண்டு குடுகுடுவென 4 ஆடுகளும் என்னை நோக்கி ஓடிவந்தன, போட்டோவாவது ஒன்றாவது "போதுமடா சாமி" என்று போட்டிபோட்டு ஓடிவந்து காரில் ஏறி கதவைச்சாற்றிய பிறகுதான் மூச்சே வந்தது. காரிலிருந்த கணவரும், விபூ, சத்யா ஆச்சிரியமாக அதற்குள் போட்டோ எடுத்துமுடித்துவிட்டாயா? என பார்த்தார்கள், ஏனென்றால் நான் இறங்கி போட்டோ எடுக்கச்சென்றால் குறைந்தது 15 நிமிடமாவது ஆகும் :) நான் வாய்திறந்து பதில்சொல்வதற்குள் நீ ஓன்றும் சொல்லவேண்டாம், நாங்களே சொல்கிறோம் என்பதுபோல 4 ஆடுகளும் என் கார்ஜன்னலில் வந்து மே மே என கத்த ஆரம்பித்துவிட்டது.

எல்லோருக்கும் என்னை பார்த்து ஒரே சிரிப்பு :( அதன்பின் பயணம் முடியும்வரை ஆடுகளைப்பார்த்து விட்டால் போதும் எல்லோரும் உன் ஃப்ரண்ட் வருகிறார் என்று என்னை ஒரே கிண்டல்தான் :) ஆடுகளிடமிருந்து தப்பித்து ஒருவழியாக காரை எடுத்து அங்கிருந்துகிளம்பினோம்.


கொஞ்சம் கொஞ்சமாக மாலையும் நெருங்க ஆரம்பித்துவிட்டது. மலையை சுற்று சுற்று என்று சுற்றி ஒருவழியாக Sirdal ஊருக்கு மாலை 7 மணிக்கு வந்தடைந்தோம். வீட்டிற்கு வந்தபின்தான் அனைவருக்கும் பயணத்தின் களைப்பே தெரிந்தது :) இரவுச்சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் கியராக் மலை போவதற்கு வழி மற்றும் அதைப்பற்றிய விபரங்களை இண்டெர்நெட்டில் பார்க்க ஆரம்பித்தோம். ஏற்கனவே வீட்டிலேயே என் கணவர் விபூ, சத்யா இரண்டுபேருக்கும் ஒரு வேலை கொடுத்திருந்தார். போகும் இடங்களைப்பற்றிய தகவல்களை ஏற்கனவே நாங்கள் சேகரித்துவைத்திருந்தாலும் அவர்களும் படிக்கவேண்டுமென்பதற்காக, ஆளுக்கொருநாள் போகுமிடம், அதைப்பற்றிய சிறிய குறிப்பு, அந்த இடத்தில் முக்கியமாக பார்க்கவேண்டியவை என மற்றவர்களுக்கு சொல்லவேண்டும். அதன்படி அன்று சத்யா கியராக் மலை பற்றி ஒரு சிறு லெக்ட்சர் கொடுத்தான், அந்தக்கனவிலேயே தூங்கச்சென்றோம்..............

                                                                                                                பயணம் தொடரும்..................



Tuesday, September 25, 2012

கோடைவிடுமுறை நார்வே: Tjørhom- 15.08.12

முதல் நாள் பயணம்
கப்பல் கொஞ்சம், கொஞ்சமாக நகர ஆரம்பித்தவுடன் கூட்டமும் கப்பலின் மேல் தளத்திலிருந்து கலைய ஆரம்பித்தது. நாங்களும் கிளம்பி கப்பலை நவக்கிரஹத்தை சுற்றுவது போல் எல்லா தளத்திற்கும் சென்று சுற்றி பார்த்து விட்டு, களைப்பை போக்க கேக், காபி, ஐஸ் என்று சாப்பிட்டு விட்டு, அறைக்குச்சென்று குளித்து ரெடியாகி முன்பே புக் செய்திருந்தபடி இரவு 08.30-க்கு, இரவுச்சாப்பாடு புஃப்பே- க்கு (Dinner Buffet) ஜன்னலோரத்து டேபிளில் அமர்ந்தோம். சூரியன் மறையும் அழகை ரசித்துக்கொண்டும், அங்கு கடைவிரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற உணவு வகைகளில் எதைச்சாப்பிடுவது
எதைவிடுவது என்று தெரியாமல் ஒருத்தரை மாற்றி ஒருத்தரையும், மற்றவர்களை பார்த்து கேலி செய்தும், சிரித்தும், ஆனாலும் வயிறு முட்ட சூப், மீன், கோழி, உருளைக்கிழங்கு, ரைஸ், நூடுல்சாலட், வகைவகையான பழங்கள் கடைசியாக சாக்லெட், வெண்ணிலா புட்டிங் என்று ஒன்றையும் விடாமல் சாப்பிட்டு விட்டு 10:30 மணிக்கு ஓட்டலை விட்டு நடக்க முடியாமல் உருண்டு உருண்டு நால்வரும் வெளியில் வந்தோம்.
அப்படியே போய் படுக்க முடியாது என்ற நிலைமை எல்லோருக்கும், என்னசெய்வது  கப்பலில் வாக்கிங் போக வேண்டியதுதான் என்று திரும்பவும் கப்பலின் கீழ்தளத்திலிருந்து மேலே கீழே என்று நள்ளிரவு 12மணிவரை சுற்றிவிட்டு, போட்டோவும் எடுத்துவிட்டு அறைக்குவந்து அசந்து நன்றாக தூங்கினோம். அடுத்தநாள் காலை எழுந்து, குளித்து ரெடியாகி கப்பலின் 14-வது மாடிக்குச்சென்றேன். கப்பலும் ஓஸ்லோவை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எல்லாத்திசைகளிலும் மாற்றி மாற்றி போட்டோ எடுத்தார்கள், நானும் தான் :) ,எப்போதும் லேட்டாக எழுந்திரிக்கும் நான் :( இதற்காகவே முதல் ஆளாக எழுந்து ரெடியானேன்.  
ஒருவழியாக காத்திருந்தநேரமும் வந்தது, ஒஸ்லோ கண்களில் தெரிய ஆரம்பித்தது. எல்லோரும் கைதட்டி அவரவர் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். அறைக்குச்சென்று மூட்டைமுடிச்சுக்களை எடுத்துக்கொண்டு வேகவேகமாக கப்பலின் அடித்தளத்திற்கு கார்பார்க்கிங் நோக்கிச்சென்றோம். கப்பலும் ஒஸ்லோவை குறிப்பிட்ட நேரத்திற்கு காலை 10 மணிக்கு சென்றடைந்தது. ஓவ்வொறு காராக வெளியில் செல்ல ஆரம்பித்தது. வெளியில் வந்தால் கஸ்டம்ஸ் செக்கிங் வேறு, சில கார்களை அக்குவேர் ஆணிவேராக எல்லா லக்கேஜையும் வெளியில் எடுத்து சூட்கேஸ்களையெல்லாம் பிரிக்கச்சொல்லி செக் பண்ணிக்கொண்டிருந்தார்கள். முதல்நாள் கார்பார்க்கிங்கிலேயே ஒரு செக்கிங் முடிந்து, யார் யார் கஸ்டம்ஸ் கிளியர் செய்யவேண்டும் என்று காரில் ஸ்லிப் வைத்திருப்பார்கள் போல, அவர்களுக்கென்று தனியாக கியூ இருந்தது. எங்களிடம் டிரஸ்ம், சாப்பாடும் தான், பெரிதாக கிளியர் பண்ணுவதற்கு வேறுஒன்றும் இல்லை, இருந்தாலும் நார்மல் கியூவில் நின்று எல்லாவற்றையும் முடித்துவெளிவருகையில் 11மணியாகிவிட்டது. கலர்லயன் கப்பலுக்கு டாடா பை பை சொல்லி, அடுத்தகட்டமாக நாங்கள் புக் செய்திருந்த தங்குமிடம் டிஜோர்ஹோம் நோக்கி 390 கிமீ பயணத்தை துவங்கினோம். 
கூகுல் 390 கிமீ-க்கு 6 மணிநேரம் காட்டியது. இதுவே ஜெர்மனியாக இருந்தால் என் கணவர் 3 மணிநேரத்திலே சென்றிருப்பார், ஆனால் நார்வே ஆயிற்றே !!! கொஞ்சம் வயிற்றுக்கும் கொடுத்துவிட்டு பயணத்தை துவக்கினோம். கூகுல் சொன்னதோ 6 மணிநேரம், ஆனால் எங்களுக்கு அதைவிட கூடவே நேரம் எடுத்தது. ஆச்சரியமாக இருக்கிறதா ??? போகும்வழியெல்லாம் அவ்வளவு கொள்ளை அழகுடன் இருந்தது, எங்களால் நிறுத்தாமல் இருக்கமுடியவில்லை....
                                                                                                               
                                                                                                               பயணம் தொடரும் :) ....

Tuesday, September 18, 2012

2012 கோடைவிடுமுறை-நார்வே


பயண ஏற்பாடுகள்
விடுமுறை விடுவதற்கு 2,3 மாதத்திற்கு முன்பே எப்போதும் போல் இந்த விடுமுறைக்கும் எங்கு செல்வது என்று எங்கள் 4 பேருக்கும் பெரிய பட்டிமன்றமே நடந்தது, இந்தியா, அமெரிக்கா, நார்வே....? என பட்டியல் நீண்டு கொண்டே போனது. கடைசியில் எல்லோரும் ஒருமனதாக நார்வேக்கு ஓட்டுப்போட்டோம். எந்த நாட்டிற்கு என்று முடிவுசெய்வதற்குள் ஜூன் மாதக்கடைசியாகி விட்டது.

அடுத்ததாக எங்கெங்கு செல்வது என்று நீண்ட பட்டியல் போட்டோம். கீழே தெற்கில் தொடங்கி மேலே Northpole வரை சென்று வரலாம் என்று ரொம்ப சந்தோசமாக plan போட்டு விட்டு, பல முறை நார்வே சென்று வந்த ஜெர்மன் friend-டிடம் கலந்தாலோசித்தோம். பட்டியலை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே என் கணவரிடம் சொன்னார்:பூபதி, நீ ஜெர்மனியில் காரில் பறப்பது போல்,நார்வேயிலெல்லாம் பறக்க முடியாது, எங்கு சென்றாலும் மிகுந்த ஏற்ற இறக்கமும், எக்கசக்க ஹேர்பின் பெண்டுகளும் உண்டு. அதனால் கிமீ குறைவாக இருந்தாலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு செல்லுவதற்கு நேரம் நிறையவே எடுக்கும் என்றும் விளக்கினார். நார்த்போல் செல்லும் கனவில் இருந்த எனக்கு மிகுந்த வருத்தமாகி விட்டது. எனது கணவர் உடனே சமாதானப்படுதினார்- நார்வே பக்கத்திலே தானே இருக்கிறது, அடுத்த விடுமுறைக்கும் போய்விட்டால் போச்சு என்று. வேறு வழியில்லாமல் "ரூட்ட மாத்து மாமே" என்று சொல்லி ஓஸ்லோ(Oslo)-வில் தொடங்கி, நடுநார்வேயில் போர்சண்ட்(Forsand), மேற்கே ப்பேர்கன்(Bergen), ஓமாஸ்ரண்ட்(Omastrand), நார்த்அட்லாண்டிக்ரூட்(Northatlanticstreet), கைராங்கர் (Geiranger)  வரை சென்று, பின்பு ஸ்வீடன், டென்மார்க் வழியாக ஜெர்மன் திரும்புவது என்று முடிவுசெய்தோம். ஆனால் நார்வே சென்றபின் வேறு பிளான் மாற்றினோம் ;) !!! அது பற்றி பின்னால் சொல்கிறேன்:)


 நார்வேயில் எங்கெங்கு செல்வது என்று முடிவாகிவிட்டது, ஆனால் ஜெர்மனியிலிருந்து நார்வேக்கு 1)கடல்கடந்து கப்பலில் 2)விமானத்தில் அல்லது 3)டென்மார்க், ஸ்வீடன் பாலம் வழியாக செல்லலாம். எங்களுக்கு கப்பலில் எங்கள் காரை ஏற்றிக்கொண்டு செல்வதுதான் சரியாகப்பட்டது. அதனால் முதலில் கப்பலில் புக்செய்தோம்.


ஒரு வழியாக இதையெல்லாம் முடிவு செய்தபின் தங்குவதற்கு அந்தந்த ஊர்களில் வசதியான மற்றும் இயற்கையின் அழகை வீட்டிலிருந்தபடியே ரசிக்கும் வண்ணம் மலையடிவாரம், மலையும்,ஏரியும் இருக்கும் இடம் என்று இண்டெர்நெட்டில் தேடித்தேடி கண்டுபிடித்து புக்செய்தோம்.

ஒரு வாரத்திற்கு முன்பே துணிகள்,சமையலுக்கு தேவையான சாமான்கள், 2 வாரத்திற்கு பதப்படுத்தியபால் என்று எடுத்து போவதற்கு லிஸ்ட் போட்டேன்(1 லிட்டர் 2 யூரோ=72 ரூபாய் என்று இண்டெர்நெட்டில் படித்தபோதே நினைத்துவிட்டேன் 2 வாரத்திற்கு ஜெர்மனியிலிருந்தே வாங்கிச்செல்வதென்று, பால் மட்டுமல்ல எல்லாமே 2,3 மடங்கு ஜெர்மனியைவிட விலைகூடத்தான் :( ) வீட்டில் கணவர், குழந்தைகள் சிரித்தனர். ஆனால் எனக்குத்தான் அங்கு உள்ள விலையை பார்த்து மயக்கமே வந்துவிட்டது, ஆனால் உண்மையிலேயே நார்வேயின் அழகை பார்த்தபின் எல்லாம் மறந்து விட்டது:)

காத்திருந்து,காத்திருந்து நாங்கள் நார்வே கிளம்ப வேண்டிய அந்த நாளும் 14.08.12 வந்தது.
எங்கள் ஊரிலிருந்து துறைமுகம் 600 கிமீ, கூகுல் மேப் 5மணி 30நிமிடம் காட்டியது. கீல்(Kiel,Germany)துறைமுகத்திலிருந்து எங்கள் கப்பல் மதியம் 2 மணிக்கு கிளம்பி அடுத்தநாள் காலை 11 மணிக்கு ஓஸ்லோ சென்றடையும். 

ஆனால் 2 மணி கப்பலுக்கு, ப்ளைட்டில் போவதுபோல் 12 மணிக்கே போர்டிங் என்று சொல்லிவிட்டார்கள். OK, நம்ப கார்தான் எப்பவுமே பறக்குமே அதனால் வீட்டிலிருந்து காலை 06:30 மணிக்குக் கிளம்பினோம். செக்கிங் எல்லாம் முடித்து மதியம்13:15க்கு காரை கப்பலின் அடித்தளத்தில் நிறுத்திவிட்டு, நாங்கள் புக்செய்திருந்த கடல்பக்கம் ஜன்னல் உள்ள 4bed with seaview அறைக்கு ஆர்வமாக சென்றோம்.பெட்டி,படுக்கைகளையெல்லாம் ரூமில் போட்டுவிட்டு வேகமாக கப்பல் கிளம்பும்போது பார்ப்பதற்காக கப்பலின் மேல்தளத்திற்கு 14வது மாடிக்கு சென்றோம். அங்கு ஒரே திருவிழா கூட்டமாக இருந்தது:) எங்களுக்கு முன்பே சென்று கப்பலின் பின்விளிம்பில் நிறைய பேர் இடம்பிடித்திருந்தனர். கீல் நகரத்தை பார்த்து எல்லோரும் டாடா காண்பித்தார்கள்,நாங்களும் தான் :) கப்பலும் அழகாக ஆடாமல் அசையாமல் கிளம்பியது, கொஞ்சம்கொஞ்சமாக ஊர் மறைந்து எந்தபக்கம் திரும்பினாலும் தண்ணீர் தெரிய ஆரம்பித்தது.....


காத்திருங்கள் விரைவில் பயணம் தொடரும்.......