முந்தையநாளே டிக்கெட் வாங்கிவிட்டதால் வீட்டிலிருந்து கிளம்பி நேராக மின்சாரபடகு நிற்குமிடத்திற்கு சென்றோம். எப்போதும்போல் என்னைத்தவிர மற்ற மூவரும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர். படகும் ரெடியாகயிருந்தது, ஒருநிமிடம் நிற்ககூடநேரமில்லாமல் உடனே ஏற படகும் எடுத்தஎடுப்பிலேயே ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது :)
எங்களுடன் படகில் ஒரு அக்கா-தங்கை, அப்பா-மகள் என்று ஒரு குரூப்பே வந்தது. சொல்லிவைத்தார்ப்போல் மூன்று அம்மாவும் பார்வையாளராக டிக்கெட்!!! எடுத்து வந்தது ஆச்சரியமாக இருந்தாலும், எனக்கு மட்டும் சந்தோசமாக இருந்தது, வேறு எதற்கு, நம்மைப்போல் பயந்தாங்கொள்ளிகளும் இங்கும் இருக்கிறார்கள் என்றுதான் :)
படகில் உதவியாளராக வந்த அந்த இளைஞன் மிகவும் சுறுசுறுப்பு, ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேலைசெய்தான். அவர்களையெல்லாம் பார்த்து எனக்கும் பிபி கொஞ்சம் இறங்கி நார்மலுக்கு வந்ததுபோல் இருந்தது, ஒகே விடியோ எடுக்கலாம் என்று எடுக்கஆரம்பித்தேன். முதலில் அக்கா-தங்கை சென்றார்கள், அதற்குள் விபூவிற்கும், அப்பாவிற்கும் சேஃப்டி கோட், பெல்ட் போட்டு, ரெடியாக உட்கார்ந்திருக்க அவர்கள் முடித்து வந்தவுடன் டக்டக்கென்று இரண்டுபேரும் போட்டிருந்த பெல்டிலிருந்த கொக்கிகளை பாராசூட்டில் மாட்ட நொடியில் அப்பாவும், மகளும் "நான் போகிறேன் மேலே மேலே" என்று பாடிக்கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் நிலத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தார்கள் :)
அடுத்ததாக சத்யா தனியாக செல்லுவதற்கு அவனுக்கு பாதுகாப்பு கோட், பெல்ட் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்தவுடன் எனக்கு கீழே இறங்கிய பிபி எல்லாம் ஜெட் வேகத்தில் திரும்ப ஏற ஆரம்பித்தது :)
ரொம்ப ஜாலியாக விபூவும், அப்பாவும் கீழேயிறங்கி என்னிடம் வந்து பயமேயில்லை, மேலே போனபின் காற்றில் நாம் ஆடுவதுகூடயில்லை, மேலேயிருந்து பார்த்தால் ஊரெல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப சூப்பராகயிருக்கு என்று ஒரே பெருமையாக பேசினார்கள். உன்னுடன் இன்னொறுமுறை நானும் வருகிறேன் என்று இரண்டு பேரும் எவ்வளவோ சொன்னார்கள், அவர்களைப்போல் பயமில்லாமல் போனால் ஜாலியாகயிருக்கும், அதனால் எனக்கு போக மனமே வரவில்லை:(
சத்யாவும் பறப்பதற்கு ரெடியானதால், பேச்சு அத்தோடு நின்றது :) சத்யா ஹாயாக மேலே மேலே பறந்தான்.
சத்யாவின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறிய சந்தோசத்திலும், அம்மாவிடம் ஒருவழியாக ஒகே வாங்கிவிட்ட மனநிறைவிலும் பறந்துகொண்டிருந்தான் :) மின்சாரப்படகு தண்ணீரைக்கிழித்துக்கொண்டு சென்ற வேகம்கூட மனதில் பதியவில்லை, இதுவே வேறு நேரமாகயிருந்தால் புலம்பித்தள்ளியிருப்பேன் :( நான் தான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததால் அவனிடமிருந்து கண்ணெடுக்கவேயில்லை.
ஒருவழியாக அவனும் மேலே பறந்து முடித்து கீழேயிறங்கும் நேரமும் வந்தது.
அப்பாட!!! போன உயிர் திரும்பிவந்த உணர்வு :) சுற்றிருந்த உலகமே அப்போதுதான் கண்ணுக்குத்தெரிந்தது.
2மணிநேரம் தண்ணீரிலேயே இருந்ததால் அன்றைய 39டிகிரி வெயில்கூட தெரியவில்லை.படகும் கரை வந்தது, படகோட்டிக்கும், உதவியாளருக்கும் நன்றி சொல்லி படகிலிருந்து இறங்கி பூமியில் காலடிவைத்தோம் :) பெரிய சாதனை படைத்து முடித்தார்ப்போலிருந்தது.
மதிய வெயில் மண்டையைப்பிளந்து கொண்டிருந்தது. நிழலில் அமர்ந்து கொஞ்சம் ஒய்வெடுத்துவிட்டு வெயிலுக்கு இதமாக 5ஸ்டார் ஹோட்டலின் முன்னால் அவர்களின் ஹோம் மேட் ஐஸ்விற்றுக்கொண்டிருந்தார்கள். முன்பே ஒருநாள் அந்த ஊர் சுற்றிப்பார்க்க வந்தபோது சாப்பிட்டிருந்ததால், விபூவும், சத்யாவும் அங்குதான் வேண்டும் என்று சொல்ல, ம்கூம் படகு நின்றது இந்த கடைசி, ஐஸ் கடையிருந்தது அந்தக்கடைசி :(
ஐஸ் வாங்குவதற்கு அந்த உச்சிவெயிலில் பீச்சியில் கால்மணிநேரம் நடந்து, ஒருவழியாக விருப்பப்பட்ட ஐஸ் வாங்கி சாப்பிட்டோம்.சும்மா சொல்லக்கூடாது, 5ஸ்டார் ரெஸ்ட்டரெண்ட்-டின் டேஸ்ட் ஆகா, பேஷ் பேஷ் தான் :)
அதன்பின் அங்கிருந்து தேசியப்பூங்கா உக்கா Učka சென்று ஹைக்கிங் போகலாமென்று நினைத்தோம். இது இஸ்ட்ரியன் தீபகற்பத்தில் Opatija-விலிருந்து தொடரும் ஒரு மலைத்தொடர்.
ஓபட்யா-விலிருந்து கிளம்பி வளைந்து நெளிந்து சென்ற மலைப்பாதையில் வண்டி செல்ல ஆரம்பித்தது. போகப்போக பாதை மிகவும் குறுகலாகவும் ஒரு கார் மட்டுமே போகக்கூடியதாக இருந்தது. ஆகா எதிர்த்தாற்ப்போல் வண்டிவந்தால் எப்படி? என்று நினைத்து முடிக்குமுன்பே "டோட்டோடயிங்"!!!! என்று ஜீப் வந்து நின்றது. நல்லவேளை அது வனத்துறையை சேர்ந்தது, நாங்கள் நின்று இடம் குடுத்தவுடன் அவர்கள் எங்களை கடந்து சென்றனர். அங்கேயிருந்தே வியூ நன்றாக இருந்தது.
எப்படியே வளைந்து நெளிந்து ஒரு வழியாக மலை உச்சியை வந்தடைந்தோம். அங்கிருந்து பார்த்தால் அற்புதமான காட்சியாக இத்தாலியில் தொடங்கி ஸ்லொவெனியா வரை தொடர்ந்துள்ள யூலியன் ஆல்ப்ஸ், இத்தாலி, ஸ்லொவெனியா, குரோவேஷியா என மூன்று நாட்டையும் இணைக்கும் Gulf of Trieste மற்றும் அட்ரியாடி தீவுகள் கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றது :)
பயணக்கட்டுரையை படித்து, அத்துடன் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன் :)
மீண்டும் வேறு பயணக்கட்டுரையில் சந்திப்போம் :)
No comments:
Post a Comment