Tuesday, August 13, 2013

குரோவேஷியா பயணம் -Parasailing, Učka- 27.07.13

சத்யா ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த பாராசைலிங் Parasailing செல்லும் நாளும் வந்தது. நானும் இதுதான் சரியான தருணமென்று, நான் சொல்லுவதைக்கேட்டால்தான் ஒகே சொல்வெனென்று சொல்ல, அவனும் எப்படியாவது பெர்மிஷன் கிடைத்தால் போதுமென்று ஒகே ஒகே என்று சொன்னான் :) என் கணவரும் "இப்போ நீ அவனிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டாலும் அவன் போடுவான்" என்று எப்போதும்போல் ஜோக் அடித்தார் :)
முந்தையநாளே டிக்கெட் வாங்கிவிட்டதால் வீட்டிலிருந்து கிளம்பி நேராக மின்சாரபடகு நிற்குமிடத்திற்கு சென்றோம். எப்போதும்போல் என்னைத்தவிர மற்ற மூவரும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர். படகும் ரெடியாகயிருந்தது, ஒருநிமிடம் நிற்ககூடநேரமில்லாமல் உடனே ஏற படகும் எடுத்தஎடுப்பிலேயே ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது :)
எங்களுடன் படகில் ஒரு அக்கா-தங்கை, அப்பா-மகள் என்று ஒரு குரூப்பே வந்தது. சொல்லிவைத்தார்ப்போல் மூன்று அம்மாவும்  பார்வையாளராக டிக்கெட்!!! எடுத்து வந்தது ஆச்சரியமாக இருந்தாலும், எனக்கு மட்டும் சந்தோசமாக இருந்தது, வேறு எதற்கு, நம்மைப்போல்  பயந்தாங்கொள்ளிகளும் இங்கும் இருக்கிறார்கள் என்றுதான் :)
படகில் உதவியாளராக வந்த அந்த இளைஞன் மிகவும் சுறுசுறுப்பு, ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேலைசெய்தான். அவர்களையெல்லாம் பார்த்து எனக்கும் பிபி கொஞ்சம் இறங்கி நார்மலுக்கு வந்ததுபோல் இருந்தது, ஒகே விடியோ எடுக்கலாம் என்று எடுக்கஆரம்பித்தேன். முதலில் அக்கா-தங்கை சென்றார்கள், அதற்குள் விபூவிற்கும், அப்பாவிற்கும் சேஃப்டி கோட், பெல்ட் போட்டு, ரெடியாக உட்கார்ந்திருக்க அவர்கள் முடித்து வந்தவுடன் டக்டக்கென்று இரண்டுபேரும் போட்டிருந்த பெல்டிலிருந்த கொக்கிகளை பாராசூட்டில் மாட்ட நொடியில் அப்பாவும், மகளும் "நான் போகிறேன் மேலே மேலே" என்று பாடிக்கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் நிலத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தார்கள் :)
அடுத்ததாக சத்யா தனியாக செல்லுவதற்கு அவனுக்கு பாதுகாப்பு கோட், பெல்ட் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்தவுடன் எனக்கு கீழே இறங்கிய பிபி எல்லாம் ஜெட் வேகத்தில் திரும்ப ஏற ஆரம்பித்தது :)
ரொம்ப ஜாலியாக விபூவும், அப்பாவும் கீழேயிறங்கி என்னிடம் வந்து பயமேயில்லை, மேலே போனபின் காற்றில் நாம் ஆடுவதுகூடயில்லை, மேலேயிருந்து பார்த்தால் ஊரெல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப சூப்பராகயிருக்கு என்று ஒரே பெருமையாக பேசினார்கள். உன்னுடன் இன்னொறுமுறை நானும் வருகிறேன் என்று இரண்டு பேரும் எவ்வளவோ சொன்னார்கள், அவர்களைப்போல் பயமில்லாமல் போனால் ஜாலியாகயிருக்கும், அதனால் எனக்கு போக மனமே வரவில்லை:(
சத்யாவும் பறப்பதற்கு ரெடியானதால், பேச்சு அத்தோடு நின்றது :)  சத்யா ஹாயாக மேலே மேலே பறந்தான்.
சத்யாவின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறிய சந்தோசத்திலும், அம்மாவிடம் ஒருவழியாக ஒகே வாங்கிவிட்ட மனநிறைவிலும் பறந்துகொண்டிருந்தான் :) மின்சாரப்படகு தண்ணீரைக்கிழித்துக்கொண்டு சென்ற வேகம்கூட மனதில் பதியவில்லை, இதுவே வேறு நேரமாகயிருந்தால் புலம்பித்தள்ளியிருப்பேன் :(  நான் தான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததால் அவனிடமிருந்து கண்ணெடுக்கவேயில்லை.
ஒருவழியாக அவனும் மேலே பறந்து முடித்து கீழேயிறங்கும் நேரமும் வந்தது.
அப்பாட!!! போன உயிர் திரும்பிவந்த உணர்வு :) சுற்றிருந்த உலகமே அப்போதுதான் கண்ணுக்குத்தெரிந்தது.
2மணிநேரம் தண்ணீரிலேயே இருந்ததால் அன்றைய 39டிகிரி வெயில்கூட தெரியவில்லை.படகும் கரை வந்தது, படகோட்டிக்கும், உதவியாளருக்கும் நன்றி சொல்லி படகிலிருந்து இறங்கி பூமியில் காலடிவைத்தோம் :) பெரிய சாதனை படைத்து முடித்தார்ப்போலிருந்தது.
மதிய வெயில் மண்டையைப்பிளந்து கொண்டிருந்தது. நிழலில் அமர்ந்து கொஞ்சம் ஒய்வெடுத்துவிட்டு வெயிலுக்கு இதமாக 5ஸ்டார் ஹோட்டலின் முன்னால் அவர்களின் ஹோம் மேட் ஐஸ்விற்றுக்கொண்டிருந்தார்கள். முன்பே ஒருநாள் அந்த ஊர் சுற்றிப்பார்க்க வந்தபோது சாப்பிட்டிருந்ததால், விபூவும், சத்யாவும் அங்குதான் வேண்டும் என்று சொல்ல, ம்கூம் படகு நின்றது இந்த கடைசி, ஐஸ் கடையிருந்தது அந்தக்கடைசி :(
ஐஸ் வாங்குவதற்கு அந்த உச்சிவெயிலில் பீச்சியில் கால்மணிநேரம் நடந்து, ஒருவழியாக விருப்பப்பட்ட ஐஸ் வாங்கி சாப்பிட்டோம்.சும்மா சொல்லக்கூடாது, 5ஸ்டார் ரெஸ்ட்டரெண்ட்-டின் டேஸ்ட் ஆகா, பேஷ் பேஷ் தான் :)

அதன்பின் அங்கிருந்து தேசியப்பூங்கா உக்கா Učka சென்று ஹைக்கிங் போகலாமென்று நினைத்தோம்.  இது இஸ்ட்ரியன் தீபகற்பத்தில் Opatija-விலிருந்து தொடரும் ஒரு மலைத்தொடர். 
ஓபட்யா-விலிருந்து கிளம்பி வளைந்து நெளிந்து சென்ற மலைப்பாதையில் வண்டி செல்ல ஆரம்பித்தது. போகப்போக பாதை மிகவும் குறுகலாகவும் ஒரு கார் மட்டுமே போகக்கூடியதாக இருந்தது. ஆகா எதிர்த்தாற்ப்போல் வண்டிவந்தால் எப்படி? என்று நினைத்து முடிக்குமுன்பே "டோட்டோடயிங்"!!!! என்று ஜீப் வந்து நின்றது. நல்லவேளை அது வனத்துறையை சேர்ந்தது, நாங்கள் நின்று இடம் குடுத்தவுடன் அவர்கள் எங்களை கடந்து சென்றனர். அங்கேயிருந்தே வியூ நன்றாக இருந்தது. 
எப்படியே வளைந்து நெளிந்து ஒரு வழியாக மலை உச்சியை வந்தடைந்தோம். அங்கிருந்து பார்த்தால் அற்புதமான காட்சியாக இத்தாலியில் தொடங்கி ஸ்லொவெனியா வரை தொடர்ந்துள்ள யூலியன் ஆல்ப்ஸ், இத்தாலி, ஸ்லொவெனியா, குரோவேஷியா என மூன்று நாட்டையும் இணைக்கும் Gulf of Trieste மற்றும் அட்ரியாடி தீவுகள் கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றது :) 
அடுத்தநாள் நீண்ட நேரப்பயணம் இருப்பதாலும், வீட்டிற்கு சென்று பேக் செய்யவேண்டியிருந்ததாலும் காரிலேயே மலை உச்சிவரை சென்றோம். அதன்பின் அங்கிருந்து சென்ற ஹைக்கிங் பாதையில் சிறிதுதூரம் நடந்துவந்தோம். நன்றாக ரசித்து முடித்துவிட்டு சூரியனும் விடை கொடுக்க பயணம் இனிதே முடிந்தது :)

பயணக்கட்டுரையை படித்து, அத்துடன் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன் :)


            மீண்டும் வேறு பயணக்கட்டுரையில் சந்திப்போம் :)
 



Thursday, August 8, 2013

குரோவேஷியா பயணம் -Plitvička Jezera - 26.07.13

இன்றைய பயணம் தேசியப்பூங்கா Plitvice Lakes-யை நோக்கி புறப்பட்டது. நாங்களிருந்த இடமான Tuliševica-லிருந்து சுமார் 189 கிமீ இரண்டரை மணிநேரப்பயணம் :(

முதலிலேயே இணையத்தில் இடம், படம் என்று பார்த்து செல்வதற்கு மிக ஆவலுடன் இருந்ததால் தூரம் ஒருபொருட்டாக தோன்றவில்லை :)

காலை உணவாக ஃப்ரட் ஆம்லெட் என்று நன்றாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.


போகும்வழி நெடுஞ்சாலையாக இல்லாமல், வளைந்து நெளிந்து, பல கிராமங்களை கடந்து செல்லக்கூடியதாகவே இருந்ததால் அதிக நேரம் எடுத்தது. ஒருவழியாக வந்துசேர்ந்து காரை பார்க் செய்து டிக்கட் வாங்கி மேப்பிலிருந்த 4மணிநேர நடைப்பயண ரூட்டை எடுக்கலாம் என்று முடிவு செய்து வேகமாக நடக்க ஆரம்பித்தோம் :)

எங்களைப்போலவே எல்லோரும் நினைத்ததால் அங்கேயும் டிரஃபிக் ஜாமாகி எங்கு பார்த்தாலும் திருவிழா போல் ஒரே கூட்டம். இதில் வெயிலின் கொடுமையால் குழந்தைகள் ஆங்காங்கே நின்று தாகத்திற்கு அருவியிலேயே தண்ணீர் பிடித்து குடித்து கொண்டார்கள். தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இருந்தது. கூட்டத்தில் இடித்து பிடித்து ஒரு வழியாக நம் குற்றால ஐந்தருவி போல் விழுந்துகொண்டிருந்த பெரிய அருவியை வந்தடைந்தால், அங்கேயும் கூட்டமாக, குடும்பமாக, நண்பர்களாக என்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்கள் பங்கிற்கும் எடுத்துக்கொண்டோம் :)

 அங்கிருந்து மலையின் உச்சி நோக்கிச்சென்ற பாதையில் செல்ல முடிவுசெய்து கிளம்பினோம்.






எல்லோரும் வேகமாக ஏறி உச்சி சென்று எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

மலையின் மேலே சென்றபின் அவ்வளவு நேரம் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி வந்ததெல்லாம் மறந்துபோகும்படியாக கீழேவிழுந்துகொண்டிருந்த டர்க்கீஸ் நிற (Turkoise) அருவியும், பச்சைநிற புற்களும், கரும்பச்சை மரங்களும் கொள்ளையழகுடன் காட்சியளித்தன. எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சளிக்காத கொள்ளையழகு :)

 ஒருவழியாக மலையின் மேலே போகும்பாதையிலேயே அரைமணி நேரத்திற்கு மேலே நடந்து ரசித்துவிட்டு, கீழே வந்தோம். திரும்பிய இடமெல்லாம் அருவி, மலை, மரங்கள் என்று இண்டெர்நெட்டில் படித்ததுபோலவே மிக அழகாகயிருந்தது.

 அருவிகளையும், அதிலிருந்து வரும் தண்ணீர் பாதைகளையும்  கடப்பதற்கென்று ஆங்காங்கே மரத்தினால் பாதை அமைத்திருந்தார்கள்.



நாங்கள் கீழேயிறங்கி வரும்போது கூட்டம் வெகுவாக குறைந்து அமைதியாக இருந்தது.


நடந்து நடந்து அனைவருக்கும் கால்கள் வலிக்க ஆரம்பித்தன. ஆனாலும் மனது இன்னும் கொஞ்ச நேரமிருந்து ரசிக்கலாமே என்று கெஞ்சியதைக்கேட்டு,  நாங்களும் அமைதியாக இருந்ததால் சிறிதுநேரம் நின்று ரசித்துவிட்டு, சூரியனும் வழியனுப்பி வைக்க திரும்ப மனமில்லாமல் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பார்க்கிங் திரும்பும்போது 9மணிக்குமேல் ஆகிவிட்டது. இரவாகிவிட்டதால் வீட்டிற்கு செல்வதற்கு எப்படியும் இரவு 12மணியாகிவிடும் என்பதால் விரைவாக கிளம்பினோம். வழியில் மலைகளின் நடுவே சூரியன் மறைவதைப்பார்ப்பதற்கு கொள்ளை அழகாகயிருந்தாலும் வண்டியை நிறுத்தி போட்டோ எடுப்பதற்கு நேரமில்லை :(  நான் புலம்புவதைப்பார்த்து, என் கணவர்  "சிலவற்றை கண்ணால் ரசிக்க மட்டும்தான் முடியும் " என்றார். அதனால் காரிலிருந்தபடியே ஒன்றிரண்டு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
பத்து மணிக்குமேல் வயிறு லேசாக தானிருப்பதை நினைபடுத்தியது. வழியில் நிறுத்தி ஃபிசா சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். வயிறும் மனதும் நிறைந்திருந்ததால் கொஞ்சநேரத்திலேயே எனக்கு தூக்கம் வந்துவிட்டது :) விபூவும், சத்யாவும் தான் அப்பாவுக்கு தூக்கம் வராமலிருக்க பேசிக்கொண்டே வந்தார்கள்.
இரவு 12.30மணிக்கு வீட்டிற்குவந்து குளித்துவிட்டு நிம்மதியாக தூங்கினோம்.
ஆனால் நாளைய பயணத்தை நினைத்து என்னால்தான் நிம்மதியாக தூங்கமுடியவில்லை :( 

                                                                                தொடரும்................................  ;)




Friday, August 2, 2013

குரோவேஷியா பயணம் -Lovran, Zagreb- 24.07.13

முதல்நாள் ஹைக்கிங் சென்று வந்ததால் அனைவருக்கும் நல்ல களைப்பாக இருந்தது. அதனால் மெதுவாக எழுந்து காலை சாப்பாட்டிற்குபின்  பக்கத்து கிராமத்துக்கு மட்டும் காரிலே ஒரு ரிப் அடித்துவிட்டு, மதியம் கடலுக்கு நீராட சென்றோம்.

நாங்களும் இங்கே கூட்டமாக இருக்கிறது, அங்கே கூட்டமாகயிருக்கிறது என்று பல பீச்சுக்களை கடந்து கடைசியில் கார் குறைவாக பார்க் செய்திருந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றால் அங்கேயும் நல்ல கூட்டம் :(

வெயில் 35 டிகிரி இருந்ததால் சுற்றுலா வந்த அனைவரும் அங்கு தான் இருந்தார்கள். ஒருபக்கம் சிறுவர்கள் பயமின்றி கடலில் தனியாக சென்று விளையாடிக்கொண்டிருந்தார்கள் மறுபக்கம் தாத்தா, பாட்டிக்கள் ஹாயாக சன்பாத் எடுத்துக்கொண்டிருந்தார்கள் :) சிறிய குழந்தைகளுடன் வந்திருந்த அம்மாக்களும், அப்பாக்களும் கரையிலேயே அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கடலில் காலை வைக்கலாம் என்று போனால், தண்ணிர் சூப்பர் குளிராகயிருந்தது. சத்யா எப்போதும் போல் "Na und...ist eagal" என்று அவன் ஸ்டைலில் தோளைத்தூக்கி ஜெர்மனில் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான், அவனைத்தொடர்ந்து என் கணவரும் செல்ல நானும் விபூவும் யோசித்துக்கொண்டே காலைமட்டும் நனைத்தோம். சிறிதுநேரத்தில் சத்யா, விபூவையும் இழுத்துக்கொண்டான் :) மாலை விட்டிற்கு சென்று ரைஸ், சிக்கன் என்று சாப்பிட்டு அன்றைய தினத்தை கழித்தோம்.

அடுத்தநாள் குரோவேஷியாவின் தலைநகர் சாக்ரஃப் (Zagreb) நோக்கி பயணம் தொடங்கியது.

 நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 186கிமீ தூரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட 2 மணிநேரம் கார் பயணம், முதலில் அவ்வளவு தூரம் வேண்டாம் என்றுதான் நினைத்தோம். விபூ இவ்வளவுதூரம் வந்துவிட்டு போகாமலிருந்தால் எப்படி என்று நினைத்ததால் ஒகே அதையும் பார்த்து விடலாம் என்று கிளம்பினோம் :)


 போகும் வழியெல்லாம் மலைகள் சூழ்ந்து இயற்கை அழகுடன் சேர்ந்து காட்சியளித்தது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
ரசித்துக்கொண்டே சாக்ரஃப் வந்துசேர்ந்தோம். கொளுத்திய வெயிலைப்பார்த்தவுடன் ஊரை சுற்றிப்பார்க்கும் ஆசையே போய்விட்டது. முதலில் சர்ச் பார்க்கலாம் என்று உள்ளே சென்றோம். ஆஹா, வெயிலின் அருமை நிழலிலே தெரிந்தது :) அமைதியாக அரைமணிநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தோம்.
பின் அங்கிருந்து கிளம்பி சிட்டி சுற்றிப்பார்க்க கிளம்பினோம். அடித்த வெயிலிலுக்கு சிறிது நேரத்திலேயே வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. நாங்களும் வீட்டிற்கு கிளம்பினோம்.

பயணத்தின் ஹைலைட்டான அடுத்த நாள் புரோகிராமை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டு!!! தூங்கச்சென்றோம் :)))

                                                      ஆவலாக உள்ளதா !!!
                                                                           விரைவில் தொடருகிறேன்....

Thursday, August 1, 2013

குரோவேஷியா பயணம் -Kap Kamenjak, Pula- 22.07.13

காலை எழுந்தவுடன் சத்யா கேட்ட முதல் கேள்வி, "மம்மி, எதற்கு ஒருவாரம் லீவ் எடுத்தோம் :( இங்கிருந்தே இன்னும் ஒருவாரம் உங்களுக்கு லீவ் எடுக்க முடியுமா?" என்பது தான்.

வீடு அமைந்திருந்த லொக்கேஷன் எங்களையும் அப்படித்தான் கேட்கவைத்தது :) மலைமேலே வீடு, பால்கனி அதையொட்டி காய்கள்,பூக்கள் மற்றும் எங்கு பார்த்தாலும் கொத்துக்கொத்தாக காய்த்துக்குலுங்கிய திராட்சை கொடிகள் நிறைந்த தோட்டம் என்றிருந்தால் யாராகயிருந்தாலும் மனதில் தோன்றக்கூடிய கேள்வி தானே :)


ஓகே,  அதனால் என்ன அடுத்த தடவை எடுத்துக்கொள்ளலாம் என்று மனதை சமாதனப்படுத்திக்கொண்டு, அன்று பார்ப்பதற்க்கென்று விபூ செலக்ட் செய்துவைத்திருந்த Kap Kamenjak பார்ப்பதற்கு கிளம்பினோம்.

 கேப் முனை Istria தீபகற்பத்தின் தென்முனையில் உள்ளது. இது ஒரு பாதுகாக்கப்பட்ட இயற்கை பூங்காவாக உள்ளது. குரோவேஷியாவில் பதினோரு அதிகாரப்பூர்வ இயற்கை பூங்கா மற்றும் எட்டு தேசிய பூங்காக்கள் உள்ளன. 

கிட்டத்தட்ட 10 கி.மீ. நீளமும் 1/1.5 கிமீ பரந்த இந்த இயற்கை பூங்கா Premantura என்ற தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ளது. ப்பூங்கா 30 கிமீ நீள கடலோரங்களையும், 20-க்கும் மேற்பட்ட விரிகுடாக்களையும் கொண்டுள்ளது. நாங்களும் 35-கூனாக்கு நுழைவுசீட்டு(1Euro=7,5Kuna) வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுநடக்கலாம் என்றால் பெரிய அதிர்ச்சி!!!
வழிமுழுவதும் ஒரே தூசி,புழுதிமணல்... இரண்டுபக்கங்களில் உள்ள மரங்கள்,செடிகள் எல்லாம் வெள்ளைபுழுதி உடைஉடுத்தி எங்களைப்பார்த்து சிரித்தது :(

நிறைய கார்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எங்களை கடந்து சென்றன. ம்கூம்... சரி நாமும் போய்ப்பார்ப்போம் என்று கிளம்பி கொஞ்சதூரத்தில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தோம். உச்சிவெயில் மண்டையை பிளந்து பாலைவனத்தை நினைவூட்டியது. கொஞ்சதூரம் நடந்தபின் தண்ணீர் தெரிய ஆரம்பித்தவுடன் தான் அனைவருக்கும் சிரிப்பு வந்தது ;) 
இருந்த ஒரே ஒரு மரநிழலில் ஒடிப்போய் இடம்பிடித்து சிறிதுநேரம் ஓய்வெடுத்தோம்.
தண்ணீர் குடித்துவிட்டு திரும்பவும் நடக்க ஆரம்பித்தோம். வழியில் மரத்தியில் ஏணிவைத்து தூரத்தில் பார்ப்பதற்கு வசதிசெய்திருந்தார்கள். 15 வயது அண்ணன் 3 வயது தம்பியையும்!!! ஏற்றுவதைப்பார்த்து அவர்கள் அம்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அண்ணனை திட்டிக்கொண்டிருந்தார்கள், அதுவும் ஜட்டிகூட போடாமல் அந்தக்குட்டி எதைப்பற்றியும் கவலைப்படாமல் அண்ணன் சொல்வதே வேதவாக்கு என்று பயமில்லாமல் மேலே ஏறி கீழேயும் இறங்கினான். 
கீழேயிறங்கும் வரை அம்மாவின் புலம்பலையும்,டென்ஷனையும் பார்த்து எனக்கு ஓரே சந்தோஷம்.... உலகில் எல்லா அம்மாக்களும் ஒன்று என்றுதான் :) ஆனால் அவன் கீழேயிறங்கும்வரை எனக்கும் டென்ஷன். ஒருவழியாக பெரிய ஆக்‌ஷன் ஷோ பார்த்துமுடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்:)

கால்கள் போதும்போதுமென்று கெஞ்சும்வரை நடந்தோம். எங்கள் கால்களைப்போலவே சூரியனும் இன்று போதும் நாளை வருகிறேன் என்று மெதுவாக மறையத்தொடங்கியது ;)
மிகவும் களைப்பாக இருந்தாலும் போகும் வழியில் புலா(Pula) என்ற ஊரில் உள்ள பழமையான அம்ஃபி தியேட்டரையும் பார்க்கலாம் என்ற முடிவுடன் வண்டியை கிளப்பினோம்.
முழுநிலவும் எங்களை வழியனுப்ப வந்தது ;) போகும் வழியெல்லாம் சூரிய அஸ்தமனத்தையும், முழுநிலவின் அழகையும் பார்த்து களைப்பெல்லாம் மறந்து அம்ஃபி தியேட்டரை அடைந்தபோது இரவு 09மணிக்குமேல் ஆகிவிட்டது. தியேட்டரை சுற்றி 3-4 தெருக்கள் கடந்தும் பார்க்கிங் கிடைக்கவில்லை, சரி வந்ததற்கு போட்டோவாவது எடுத்துக்கொள்ளலாம் என்று சத்யாவை துணைக்கு கூட்டிக்கொண்டு கிளம்பினேன் :)
உள்ளே நாடகம் நடப்பதற்கு தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள். நேரமின்மையால் போட்டோ மட்டும் எடுத்துவிட்டு பக்கத்திலேயே பிசா சாப்பிட்டுவிட்டு வயிறும் மனதும் நிறைந்த திருப்தியில் வீட்டிற்கு கிளம்பினோம் ;)


                          பயணம் விரைவில் தொடரும்............