ஏற்கனவே இண்டெர்நெட்டில் பனிமூட்டமாகயிருந்தால், மலை ஏறி பிராயோசனம் ஒன்றுமில்லை என்று படித்திருந்தோம், அதனால் அன்று ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான் என்று முடிவுசெய்தோம். வானிலை அறிக்கையும் அன்று முழுவதும் மழை என்று அறிவித்தது.
என் கணவர் போட்டுக்கொடுத்த பிரெட் ஆம்லட்டை நன்றாக சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே பொழுதைப்போக்கினோம். மாலையில் கிளம்பி காரில் ஒரு ரவுண்ட் ஊரைச்சுற்றிவிட்டு, மார்கெட்டுக்குப்போய் சாலமன் மீன் வாங்கிவந்து, ஃப்ஷ் ஃப்ரை, ஃப்ஷ் சில்லி பிரியாணி என்று சமைத்து, நன்றாக சாப்பிட்டுக்கொண்டே டிவியில் நார்வே சானல் போட்டுப்பார்த்தால் அங்கே நம்ம சூர்யாவை பேட்டிஎடுத்துக்கொண்டிருந்தார்கள். அட, நம் தமிழன் பெருமை எங்கும் ஒலிக்கிறதே என்று எண்ணி வியந்து, மாற்றான் தமிழ் படபாட்டு சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்ததையும் ரசித்தோம்.
அடுத்தநாள் காலை புல்பிட் ராக்(Pulpit Rock) ஹைக்கிங் போவதற்கு கிளம்பினோம்.
இது மிகவும் செங்குத்தான மலை. பாதை கடல் மட்டத்திலிருந்து சுமார் 270 மீட்டர் (886 அடி) உயரத்தில் ஃப்ரைகெஸ்ட்டொல்க்ய்ட்ட (Preikestolhytta) -வில் தொடங்கி 604 மீட்டர்(1982 அடி) உயரத்தில் உள்ளது.
நாங்கள் தங்கியிருந்த ஃப்போர்சாண்ட் ஊரிலிருந்து 40 நிமிடதூரத்தில் இருந்தாலும் மூன்று சுரங்கப்பாதைகளை Notvik, Høllesli-, Botsheitunnelen கடந்து செல்ல வேண்டியிருந்தது. நார்வேயில் எண்ணிலடங்கா மலைகளைக்குடைந்து சுரங்கப்பாதைகள் அமைத்திருந்தாலும், எல்லாமே நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது, பாராட்டத்தக்கது :)
ஐய்யப்பன் கோவிலுக்கு போய் வந்தவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இங்கு நேரில் அப்படிப்பட்ட பாதையை பார்த்தேன், வியந்தேன் & பயந்தேன் !!! முதல்படியைக்கடந்ததுமே, இதுவே இப்படியிருந்தால் இன்னும் போகப்போக எப்படியிருக்குமோ என்று அரைமணிநேரத்திலேயே எண்ணம் தோன்றியது.
சரி, கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை... சாமி சரணம், ஐய்யப்ப சரணம் !!!! என்றும், பழனி முருகனுக்கு அரோகரா..... போட்டுக்கொண்டும் (எல்லாம் மனதுக்குள் தான் :) ) அந்த கரடுமுரடான காட்டுப்பாதையில் ஏறினோம். ஏறினோம், ஏறினோம் ஏறிக்கொண்டே இருந்தோம்..... மலைப்பாதையும் ஏறி ஏறி போய்க்கொண்டே இருந்தது.....
நாங்கள் அரோகரா போட்டது நிஜமாகவே சாமி காதில் விழுந்தது போல, திடீரென்று கரடுமுரடான மலைப்பாதையில் ஒரு சமவெளி, ஒரு ஒற்றையடிப்பாதை, உடனே எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் !!!! இனிமேல் இப்படித்தான் போகும் போலவென்று, ஆனால் அடுத்த 10 நிமிடத்திலேயே, என் கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, திரும்பவும் வந்த பழைய கரடுமுரடான மலைப்பதை :(
இதற்குள் விபூவும், சத்யாவும் நாங்கள் முன்னால் போகிறோம், நீங்கள் மெதுவாக வாருங்கள் என்று முன்னால் கிளம்பிவிட்டார்கள்.
கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைத்தால், விபூவையும், சத்யாவையும் கண்ணிலேயே தெரியவில்லை :(
மலை ஏறித்திரும்பி வருபவர்களிடம் இன்னும் எவ்வளவு தூரமிருக்கிறது என்று கேட்டால், 2 மணிநேரமாகும் என்றார்கள். ஏற்கனவே நாங்கள் கிளம்பி 2 மணிநேரமாகிவிட்டது, இன்னும் அவ்வளவு தூரம்போகவேண்டுமா? நினைத்தபோதே ஏற்கனவே பயத்தில் ஏறியிருந்த பிபி இன்னும் ஏறியது.
சாப்பாடு, குடிப்பதற்கு தண்ணீர் என்று எல்லாம் வைத்திருந்த பேக் விபூ, சத்யாவிடமிருந்தது. பெர்முடாவில் அவசரத்திற்கு வைத்திருந்த இரண்டு குளுக்கோஸ் மாத்திரைகளும் காலி :(
ம்ம்ம்.. வேறுவழியில்லை, நடக்க வேண்டியதுதான்.
இங்கிருப்பார்கள், ஒகே இன்னும் கொஞ்சதூரத்தில் வெயிட் பண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று ஒருவழியாக ஒருமணி நேர மலைஏற்றத்திற்குப்பிறகு எங்கள் பொக்கிஷங்களை கண்டுபிடித்தோம் :) அவர்களைப்பார்த்த பிறகுதான் எனக்கும், என் கணவருக்கும் நிம்மதி வந்தது.
எல்லோரும் கொஞ்சம் ஜுஸ், தண்ணீர் என்று குடித்துவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஏறுவதைவிட இறங்குவது ஈஸிதானே, அத்துடன் ஏறி வந்த பாதைதானே, அதனால் சீக்கிரம் இறங்கிய மாதிரி ஒரு எண்ணம்.
மதியம் சுமார் 12:45 மணிக்கு கிளம்பி, திரும்பி வரும்போது இரவு 07:30 ஆகிவிட்டது. கார்பார்க்கிங் வந்தபிறகுதான் பசியே வந்தது ;) ஐஸ் மற்றும் கொறிப்பதற்கு கொண்டுசென்றிருந்த முறுக்கு, சாக்லெட் என்று சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.
மலையேறிய அனுபவம் ரொம்ப புதுமையாக இருந்தது. இண்டெர்நெட்டில் படித்ததைவிட, ஜெர்மனி, சூவிஸ், ஆஸ்ட்ரியா, இட்டாலி என ஐரோப்பாவில் பார்த்த மலைகளைவிட இங்கு ரொம்ப, ரொம்ப வித்தியசமாகவும், கஷ்டமாகவும் இருந்தது :( ஆனாலும் எங்கள் நால்வருக்குமே ரொம்பபபப....... பிடித்திருந்தது ;)
வீட்டிற்குவந்து ரெடிமேட் கேசரி, வெஜிடபுள் புலாவ் என அவசர 5 நிமிட குக்கிங் முடித்து, (வாழ்க MTR ready to cook food items ;))மதியம் சாப்பிடாதற்கும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டி விட்டு, அடுத்தநாள் அங்கிருந்து கிளம்பவேண்டுமே, அதனால் பொட்டிபடுக்கைகளையெல்லாம் பேக் செய்துவிட்டு, அப்போதுதானே காலையில் நிறைய நேரம் தூங்கலாம் ;) எப்படி எங்கள் ஐடியா, குறிப்பாக நானும், விபூவும் காலையில் எழுந்திருப்பதில் சோம்பேறிகள் !!! அதனால் தான் இந்த இரவுநேர பேக்-அப். அதன்பின் எப்போதும்போல் அன்று எடுத்த போட்டோக்களையும் பார்த்துவிட்டு, இரவு 11.38 க்கு களைப்பில் தூங்கச்சென்றோம்.
அடுத்தநாள் எங்கள் பயணம் ஃப்போர்சண்ட்-லிருந்து (Forsand) ஒமாஸ்ராண்டா (Omastranda) நோக்கி கிளம்பியது. போகும் வழியில் நம் முன்னோர்கள் சுமார் 1500 கி.மு. கி.பி. 600, 2000 ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்த லேண்டா எனும் கிராமத்தையும் பார்த்தோம்..........
விரைவில் பயணம் தொடரும்......
No comments:
Post a Comment